50 மாதமாக கிடப்பில் இருக்கும் நீட் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஐம்பது மாதங்களாகியும் விசாரிக்கப்படாத நீட் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நீட்டுக்கு  எதிரான முதன்மை வழக்கின் விசாரணை 50 மாதங்களாகியும் இன்னும் தொடங்கவில்லை. இது பெரும் அநீதி. நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை திரும்பப்பெற்ற அரசியலமைப்பு சட்ட அமர்வு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். ஆனால், அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர். ஐந்தாவது நீதிபதியானபானுமதி ஓய்வு பெறுகிறார். ஆனால், இதுவரை முதன்மை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

முதன்மை வழக்கு விசாரணைக்கு வந்தால் 2016ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சுகாதாரத் துறைக்கான நிலைக்குழு அறிக்கையின் 5.26-வது பத்தியில் இத்தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்களித்திடவும் அவ்வாறு விலக்களிக்கப்பட்ட மாநிலங்கள் பிறகு இத்தேர்வை ஏற்க முன்வந்தால் அதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட முதன்மை வழக்கை உடனடியாக விசாரணைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக புதிய அரசியலமைப்பு சட்ட அமர்வை அமைக்க வேண்டும். விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்.

Related Stories: