மனைவிக்கு கொரோனா ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் அதிர்ச்சியில் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் உயிரிழந்தார். சின்ன காஞ்சிபுரம் அமுதுபடி பின்தெருவைச் சேர்ந்தவர் ராமு (73). இவர் கடலூர் டெபுடி கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி ராஜேஸ்வரி (67). இவர்களுக்கு வேலு, வரதராஜன் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் வரதராஜன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் வேலு தனியாக வசித்து வருகிறார். ராமு மற்றும் அவரின் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு காய்ச்சல் ஏற்படவே, சின்ன காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை முகாமில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். பரிசோதனை முடிவு நேற்று வெளியானதில் ராஜேஸ்வரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவிக்கு கொரோனோ தொற்று உறுதியானதால் அதிர்ச்சி அடைந்த ராமு மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்த சேரில் அமர்ந்திருந்துள்ளார். மாலை மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது எந்தவித அசைவுகளும் இல்லாமல் ராமு இருப்பதைப் பார்த்து உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ராமு ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த விஷ்ணுகாஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: