ரேஷன் ஊழியர்களுக்கு இணையான சம்பளம் கோரி வரும் 24ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் முடிவு

சென்னை: நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு, நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 24ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், நகர கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடியாக அனைத்து வகையான நகைக்கடன்கள், குழுக் கடன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழக அரசும், கூட்டுறவுத் துறையும் கடன்கள் யாவும் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் உறுப்பினர்கள் பெயரில் மிரர் அக்கவுண்ட் தொடங்கி அதன்பேரில் மட்டுமே பட்டுவாடா செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வசூல் பணியும் பாதிக்கப்படும். எனவே, மிரர் அக்கவுண்ட் மூலம் பட்டுவாடா என்பதை மறுபரிசீலனை செய்து, ஏற்கனவே உள்ள நடைமுறையில் பணப்பட்டுவாடா செய்ய அனுமதிக்க வேண்டும். நியாயவிலைக் கடை பணியாளர்களின் ஒப்பந்தக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால் ஊதியக் கமிட்டி அமைத்து நியாவிலைக்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கிட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 24 ஆம் தேதிமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: