ஸ்வப்னா தங்க கடத்தலுக்கு விமான பணியாளர்கள் உடந்தையா?: எமிரேட்ஸ் விமான நிறுவனத்திடம் விசாரணை நடத்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!!!

திருவனந்தபுரம்:  கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் எமிரேட்ஸ் விமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தங்க கடத்தல் விவகாரத்தில் ஏற்கனவே பலரை இதுவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அதில் ஸ்வப்னா மற்றும் சந்தீப்பிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள இருவரின் வீட்டிற்கும் சென்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, தங்கக்கடத்தல் கும்பலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் வீட்டிலும் சோதனை நடத்தப்போவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தங்கக்கடத்தல் விவகாரத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக ஸ்வப்னா அவரது கூட்டாளி ஒருவரிடம் 15 லட்சம் பணத்தை கொடுத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான, விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், தங்கக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய பலரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். தற்போது சுங்கத்துறையின் விசாரணையானது விமான நிலையத்தை நோக்கி நகர்ந்துள்ளது. அதாவது துபாயிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த விமானத்தில்தான், தங்கக்கடத்தல் நடந்துள்ளது.

அதனால், எமிரேட்ஸ் விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக துபாயிலிருந்து ஐக்கிய அமீரக தூதரகம் பேரில் தங்கக்கட்டிகள் அடங்கிய பார்சலை கொடுத்தது யார்? , அதனை பெற்றவர்கள் யார்? என்பன பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில்தான், தற்போது, எமிரேட்ஸ் விமான ஊழியர்களை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். தற்போது மத்திய அரசும் இதுதொடர்பாக விசாரணை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் இதனைத்தொடர்ந்து, தங்கக்கட்டி பார்சலை ஒப்படைத்தவரின் சிசிடிவி பதிவுகளும் கேட்கப்பட்டுள்ளனர். இருப்பினும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் பதிவுகளை அளிக்க முன்வரவில்லை. இந்நிலையில், சிசிடிவி பதிவுகளை வழங்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே உலகம் முழுவதும் விமானம் மூலம் தங்கக்கடத்தல் என்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டில் கிர்கிஸ்தான் விமான நிறுவனம் ஒன்று தங்கக்கடத்தல் மாஃபியாக்களுக்கு உதவியதன் பேரில் அந்த விமான நிறுவனமே தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பெருமளவு தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தங்கக்கடத்தல் விவகாரத்திலும் எமிரேட்ஸ் விமான நிலையத்தின் மூலம் மேலும் பல தகவல்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: