விளைநிலங்கள் வழியே எரிவாயு குழாய் பதிக்க கடும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு 7 மாவட்ட விவசாயிகள் கடும் கண்டனம்

சேலம்: விளைநிலங்கள் வழியாக மட்டும் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்படும் என்ற முதலமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள் 7 மாவட்ட விவசாயிகளை அழைத்து பேச வலியுறுத்தியுள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் பணிகளை பாரத் பெட்ரோலிய நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய 7 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்வதற்காக 6 ஆயிரம் விவசாயிகளின் 1,300 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிப்பதற்கு பதிலாக சாலையோரம் குழாய்களை பதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி; விவசாயிகளின் ஒப்புதலோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு 100% இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாய கூட்டமைப்பினர், விளைநிலங்கள் வழியாக ஒருபோதும் எரிவாயு குழாய்களை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

2013-ம் ஆண்டு கெயில் எரிவாயு குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்த போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளை அழைத்து கருத்து கேட்ட பின் திட்டத்தை ரத்து செய்ததாக விவசாயிகள் கூறினர். அதேபோல எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாவட்ட விவசாயிகளை அழைத்து முதலமைச்சர் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்தனர்.

Related Stories: