பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் விவகாரம்: யுஜிசி முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனுதாக்கல்

புதுடெல்லி: பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் யுஜிசி முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனுதாக்கல் செய்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டிது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானிய குழு (யு.சி.ஜி.) அறிவித்தது. ஆனால் கொரோனா பரவல் நீடிப்பதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவசேனாவின் யுவசேனா பிரிவு, யுஜிசியின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக யுவசேனா அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் உள்ள மாணவர்களின் மனநிலை, உடல்நிலை, அச்சம், பாதுகாப்பு ஆகியவற்றைப் புறக்கணித்து மத்திய அரசு செயல்படுகிறது. அதனால்தான் யுஜிசி அமைப்பை பல்கலைக்கழகத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளது. கொரோனா வைரஸ் தேசியப் பேரிடராக அமைந்துள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, யுஜிசி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.

ஆனால், நாட்டு மக்கள் சந்தித்துவரும் சூழலை யுஜிசி புரிந்து கொள்ளவில்லை என்பதையே அதன் செயல்பாடு வெளிப்படுத்துகிறது. தேர்வுகள் நடத்தப்படும்போது மாணவர்களுக்கும், தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருக்கிறது. நாட்டில் உள்ள பெரிய உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி கூட இறுதி ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டன. மாணவர்கள் இதற்கு முன் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்புதான் முக்கியம். ஆதலால், யுஜிசி உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுகிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: