கொரோனா தடுப்பு மருந்தான 'கோவாக்சின்' 3 பேருக்கு செலுத்தி சோதனை; எந்தவித எதிர் விளைவுகளும் ஏற்படவில்லை என ஹரியானா அமைச்சர் தகவல்

சண்டிகர் : இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவாக்சின், மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கும் பணி ஹரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் தொடங்கியது. ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய வைராலஜி மையம் மற்றும் தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து, கோவாக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்தத் தடுப்பு மருந்து கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து. முதல்கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில், இந்த மருந்தை மனிதர்களுக்கு அளித்து பரிசோதிக்க மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம், ஐசிஎம்ஆர் ஆகியவை அனுமதி வழங்கின..

இந்தநிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. ஹரியாணா மாநிலம் ரோதக்கில் இந்த முயற்சி நடைபெறுகிறது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்படும் சோதனை ரோதக்கில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் தொடங்கியது. 3 பேருக்கு செலுத்தி சோதிக்கப்படுகிறது. தடுப்பு மருந்த்தை அவர்கள் உடல் ஏற்றுக் கொண்டுள்ளது. எந்தவிதமான எதிர் விளைவுகளும் ஏற்படவில்லை.’’ எனக் கூறினார்.

Related Stories: