ம.பி.யில் நிலத்தை தர மறுத்து விஷம் குடித்த தம்பதி மீது போலீஸ் கொடூர தாக்குதல்: கலெக்டர், எஸ்பி அதிரடி நீக்கம்

குனா: மத்தியப் பிரதேசத்தில் நிலத்தை கைப்பற்ற வந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட விவசாய தம்பதி மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், குனா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ராம்குமார் (38), சாவித்ரி தேவி(35). தம்பதியான இவர்கள், பல ஆண்டுகளாக தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த காபூ பார்டி என்பவரிடம் இவர்கள் ரூ.3 லட்சம் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால், ராம்குமார் பயிரிட்டுள்ள நிலத்தை கல்லூரி கட்டுவதற்காக அரசு கையகப்படுத்தி உள்ளது. இதனால், வருவாய் துறை அதிகாரிகள் நிலத்தில் உள்ள பயிர்களை அழித்துவிட்டு வேலி அமைப்பதற்காக  ஏராளமான போலீசாருடன் நேற்று முன்தினம் வந்தனர். ஆனால், தங்கள் நிலத்தில் உள்ள பயிர்களை நாசப்படுத்துவதை பார்த்த ராம்குமார், சாவித்ரி ஆகியோர் அதிகாரிகளை தடுக்க முயன்றனர். அப்போது, திடீரென இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயன்றனர்.

அவர்கள் வரமறுத்ததால், போலீசார் அவர்களை தடியடியால் அடித்து நொறுக்கினர். இருவரும் கட்டி அணைத்தப்படி கதறினர். இதை  தடுக்க வந்த ராம்குமாரின் மகனையும் போலீசார் அடித்து இழுத்து சென்றனர். மாவட்ட கலெக்டர் விஸ்வநாத் கூறுகையில், ‘‘ பூச்சிக்கொல்லி மருந்து குடித்த அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றிருக்கவில்லை என்றால் இறந்து இருப்பார்கள்,” என்றார். எனினும் இந்த கலெக்டர், எஸ்பி.யை ம.பி. அரசு இப்பதவியில் இருந்து நீக்கியுள்ளது.  தம்பதி தாக்கப்பட்டது குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தம்பதியை போலீசார் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

* ராகுல் கண்டனம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இதுபோன்ற மனநிலை மற்றும் அநீதிக்கு எதிரானது நமது போராட்டம்,’ என கூறியுள்ளார்.

* நடவடிக்கை உறுதி

காங்கிரசில் இருந்து விலகியவரும், மபி.யில் பாஜ ஆட்சி ஏற்பட வழிவகுத்தவருமான ஜோதிராதித்யா சிந்தியா கூறுகையில், “குனா மாவட்ட எஸ்பி, கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுமிராண்டிதனமான சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Related Stories: