பாமக 32வது ஆண்டு விழா சிறப்பு செயற்குழு கூட்டம் கல்வி, வேலை வாய்ப்புகளில் 17 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: பாமக 32வது ஆண்டு விழா சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 17 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாமக 32வது ஆண்டு விழாவையொட்டி சிறப்பு செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் இணையவழியில் நேற்று நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

கொரோனா வைரஸ் பரவல் விரைவாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். அரசின் முயற்சிகளுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். சென்னை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்படும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும். தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 17 சதவீதம் தனி இடஒதுக்கீடு  வழங்க வேண்டும். இனி வரும் காலங்களிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

கிரிமிலேயர் வருமான வரம்பு ஆண்டுக்கு 12 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் விரைவில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். குறுவைப் பயிர்களைக் காக்க காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்க வேண்டும். வங்கிக்கடன் தவணைகள் மீதான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும். கொரோனா அச்சம் தணிந்து, நிலைமை சீரடையும் வரை மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன்களுக்கான தவணைத் தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்வதை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 14 வழித்தடங்கள் உட்பட நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 ரயில் சேவைகளை தனியார்மயமாக்க ரயில்வே வாரியம் முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: