வேலூர் மாநகராட்சியில் உள்ள அரசு உணவகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இருவேளை இலவச உணவு

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் உள்ள அரசு மலிவுவிலை உணவகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு நாள்தோறும் காலை, மதிய உணவு இலவசமாக வழங்க வேண்டும், என்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கடந்த சில நாட்களாக கலெக்டர் சண்முகசுந்தரம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நகரும் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும்  தூய்மை பணிகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் சங்கரனிடம் கேட்டறிந்தார்.

அப்போது நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 1000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாக கமிஷனர் சங்கரன் தெரிவித்தார். அப்போது கலெக்டர் சண்முகசுந்தரம் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறதா? என்றார். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் வீட்டில் இருந்து உணவு எடுத்து வருவதாக தெரிவித்தனர். இதனை அறிந்த கலெக்டர் சண்முகசுந்தரம் கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தினமும் காலை, மதிய உணவுகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு அரசு மலிவுவிலை உணவகத்தில் இருந்து இலவச உணவு வழங்க கமிஷனர் சங்கரன் நடவடிக்கை மேற்கொண்டார். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 10 அரசு மலிவுவிலை உணவகங்கள் உள்ளன. தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு இரண்டு வேளை இலவச உணவு வழங்க கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், வேலூர் மாநகராட்சியில் கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் இனி இரண்டு வேளை இலவச உணவு வழங்கப்படும், என்றனர்.

Related Stories: