சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமியை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வரையும் விசாரிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.இதனிடையே, இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தந்தை, மகன் ஆகிய இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தனர் என்று பிரேதப்பரிசோதனை அறிக்கை வரும் முன்னரே தெரிவித்தார். இது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. போலீசாரை காப்பாற்றும் நோக்கத்தில் முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணை நடக்கும் முன்பே இருவரும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்கள் எனப் பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். குற்றவாளிகளைப் பாதுகாக்கும் செயலாகவே இதனை கருத வேண்டும். இந்த கொலைக்கு முதல்வருக்குத் தொடர்பு உள்ளதா என விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி முதல்வர் கவனிக்கும் துறையின் கீழ் வருகிறது என்பதால், வழக்கு விசாரணை திசை மாறாமல் இருக்க நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதல்வரை விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: