கும்பகோணம் கோர தீ விபத்தின் 16ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!: குழந்தைகள் உருவ படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி!!!

கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு 16ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தனியார் பள்ளியில் தீ விபத்து நடைபெற்றது. இந்த கோர தீவிபத்தில் 94 குழந்தைகள் உடல்கருகி உயிரிழந்தன. அந்த கொடூர சம்பவம் பெற்றோர்களை மட்டுமல்ல அனைவரது நெஞ்சையும் உலுக்கியது.

நெருக்கடியான இடத்தில் இயங்கிய பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வந்தனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் மாணவர்கள் வெளியேற சரியான வழி இல்லாத காரணத்தினால் தான் 94 பிஞ்சு குழந்தைகளும் தீயில் கருகி இறந்தனர். நெரிசலில் சிக்கி 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இதனை அனுசரிக்கும் விதமாக வருடாவருடம் அப்பள்ளி முன்னர் குழந்தைகளின் பெற்றோர் அஞ்சலி செலுத்தி வருவதுண்டு. அதன்படி 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தீவிபத்து நடைபெற்ற பள்ளியின் முன்பு, குழந்தைகளின் உருவ படத்திற்கு மலர்த்தூவியும், மெழுகுவர்த்தி ஏர்த்தியும் அஞ்சலி செலுத்தினர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூட்டம் கூடாமல் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: