தூக்கு கயிறை எதிர்நோக்கும் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷனை சந்திக்க நிபந்தனையற்ற அனுமதி தேவை!: இந்தியா வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி கொண்டிருக்கும் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை சந்திக்க நிபந்தனைகள் அற்ற அனுமதி தரவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. தங்கள் நாட்டுக்கு எதிராக உளவு பார்த்ததாக இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

தொடர்ந்து, 2017ல் மரண தண்டனை விதித்தது. ஆனால் இந்தியாவின் தீவிர முயற்சியால் அவரது மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து 2019ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குல்பூஷன் ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என்பது சர்வதேச நீதிமன்றத்தின் கருத்தாகும். இந்நிலையில் தண்டனையை எதிர்த்து மறுபரிசீலனை மனு அளிக்க குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் அரசு ஜூலை 20ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.

ஆனால் மறுபரிசீலனை மனுவுக்கு பதிலாக கருணை மனு அளிக்க குல்பூஷன் ஜாதவ் விரும்புவதாகவும் பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் கூறியிருந்தது. இந்த சூழலில் குல்பூஷனை  சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நிபந்தனைகள் அற்ற அனுமதி தேவை என்று இந்தியா கூறியுள்ளது. பாகிஸ்தான் இதற்கு மறுப்பு தெரிவிப்பதால் இந்திய அதிகாரி குல்பூஷக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: