கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு வழங்கிய நிதி போதவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: “கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு வழங்கிய நிதி போதுமானதாக இல்லை. கூடுதல் நிதி வழங்க வேண்டும்” என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் மண்டலம் எண்ணூர் காமராஜர் நகரில் அமைக்கப்பட்டுள்ள இணை நோயாளிகள் மருத்துவ சிறப்பு பரிசோதனை முகாமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: கடந்த ஒருவாரமாக சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும், தொற்று எண்ணிக்கை குறைவாகவும், இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஊரடங்கின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்த போது, சென்னை நகரம் வாழ தகுதி இல்லாத நகரம் என்று கூறினார்கள். மக்கள் 100 சதவீதம் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றை ஜீரோ நிலைக்கு கொண்டு வந்து விடலாம். கொரோனா பேரிடர் நிவாரண சிறப்பு நிதியாக ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், ஆண்டுதோறும் தேசிய பேரிடர் நிவாரணமாக வழங்கப்படும் நிதியில் இருந்து ரூ.510 கோடி மட்டுமே முதல்கட்டமாக வந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது போன்று பல்வேறு நிவாரண பணிகளுக்கு தமிழகத்திற்கு சிறுக, சிறுக நிதி வழங்கப்பட்டு வருவது உண்மைதான். இருப்பினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு வழங்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை. கூடுதலாக நிதி வழங்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: