புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் மீண்டும் படிக்க மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை: மத்திய அரசு

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் மீண்டும் படிக்க மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா காய்ச்சல் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் தங்களின் வசிப்பிடத்தை விட்டு, அதே மாநிலம் அல்லது பிற மாநிலங்களில் உள்ள தங்களின் சொந்த வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இந்த சூழலில் எக்காரணம் கொண்டும் அவர்களின் பெயர்களை மாணவர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடக் கூடாது.

ஏற்கெனவே அவர்களின் குழந்தைகள் படித்த பள்ளிகளில் புதிய தரவுத் தளத்தை உருவாக்க வேண்டும். அதில் மாணவர்கள் குறித்து, புலம்பெயர்ந்தோர் என்றோ தற்காலிகமாக இல்லை என்றோ குறிப்பிட வேண்டும். அதற்கு முன்னதாக பள்ளிகள், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரைத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ள வேண்டும். போன், வாட்ஸ் அப் அல்லது அண்டை வீட்டுக்காரர்கள் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் விவரங்களைத் தனியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல மாநில அரசுகள், எந்தவொரு ஆவணத்தையும் கேட்காமல் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக மாணவர் சேர்க்கைக்கு மாற்றுச் சான்றிதழ் வேண்டும் என்றோ முன்னர் படித்த பள்ளி குறித்த சான்றையோ கோரக் கூடாது. தேவைப்பட்டால் சில அடையாள அட்டைகளை மட்டும் கேட்டுப் பெறலாம். குழந்தைகளின் பெற்றோர் அளிக்கும் தகவல்களை சரியெனக் கொண்டு மாணவர்களை அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: