கோயில் நிலம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நியாயம் கேட்ட திமுக எம்எல்ஏவை பொய் வழக்கில் கைது செய்தது ஏன்? தா.மோ.அன்பரசன் கேள்வி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான தா.மோ.அன்பரசன் அறிக்கை:

திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ .இதயவர்மன், திருப்போரூர் அடுத்த இள்ளலூர் ஊராட்சி, செங்காடு கிராமத்தை சேர்ந்தவர். அதே ஊரை சேர்ந்தவர் குமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது அண்ணன், மாமனார் ஜெயலலிதாவின் சிறுதாவூர் தோட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர், தனது சொந்த ஊரான செங்காடு கிராமத்தில் 60 ஏக்கர் நிலத்தை ஊர்மக்களிடமிருந்து வாங்கி, சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்றுள்ளார். விற்கப்பட்ட நிலத்துக்கு பாதை அமைப்பதற்காக செங்காடு பகுதியில் உள்ள செங்கோதியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர், துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் செங்காடு கிராமம் வந்துள்ளார். இதை கேள்விப்பட்டு திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி, ஊர் மக்களுடன் திரண்டு வந்து நியாயம் கேட்டுள்ளார். இதனால் ரவுடி கும்பல் கத்தியால் வெட்டியதில் எம்எல்ஏவின் தந்தை காயமடைந்தார். அப்போது, தற்காப்புக்காக லட்சுமிபதி துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி கும்பல் ஓட்டம் பிடித்தது. இதற்கும் இதயவர்மனுக்கும் துளியும் தொடர்பில்லை. அவரது புகழுக்கு் களங்கம் கற்பிக்கும் நோக்கில் காவல்துறை திட்டமிட்டு கைது செய்துள்ளது.

ரியல் எஸ்டேட் தொழில் அதிபரும் அதிமுக பிரமுகருமான குமார், அவரது அண்ணன் தாண்டவ மூர்த்தி, அண்ணனின் மாமனார் ஏகாம்பரம் ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதயவர்மன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததற்கு திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை கண்டிக்கத்தக்கது. வன்முறையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் குமார் மீது நடவடிக்கை எடுக்காமல் நியாயம் கேட்க சென்ற இதயவர்மனின் தந்தை, இதயவர்மனை கைது செய்தது ஏன்? அதிமுக ரவுடி கும்பலுக்கு துணைபோகும் அரசாக இருக்கிறது.

Related Stories: