கூடுவாஞ்சேரியில் 2 மாதமாக குடிநீரின்றி தவிக்கும் பொதுமக்கள்: கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், 2 மாதமாக குடிநீரின்றி மக்கள் தவித்து வருவதாகவும், இதனை பேரூராட்சி நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், சென்னை அடுத்தபடி உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2015ம் ஆண்டு பல லட்சம் மதிப்பில் அருள் நகரில் உள்ள பூங்காவை ஒட்டியபடி அமைக்கப்பட்டது.  

இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மோட்டார் அடிக்கடி பழுதாகி வருகிறது. இதில், வழக்கம்போல் பழுதான மோட்டார் இரண்டு மாதம் ஆகியும் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவியாய் தவித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மோட்டார் பழுதானது குறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகத்தில் 18வது வார்டு முன்னாள் திமுக பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் குமரவேல் தலைமையில் பொதுமக்கள் திரண்டு சென்று பலமுறை புகார் கூறினோம். ஆனால் புகார் கூறி இரண்டு மாதம் ஆகியும் இதுவரை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால், அதிக விலைக்கு விற்கும் குடிநீர் கேன்களை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக பேரூராட்சிகளின் இயக்குனர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: