கல்லூரி தேர்வை ரத்து செய்யும் மாநில அரசுகளை மிரட்டுவதா? மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: கல்லூரி தேர்வு ரத்து செய்யும் மாநில அரசுகளை மத்திய அரசு மிரட்டக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதிப் பருவ தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். இறுதித் தேர்வை ரத்து செய்யும் மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருக்கிறது.

இது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல் ஆகும். கொரோனா பரவல் காரணமாக தேர்வுகளை நடத்த முடியாத சூழல் நீடிப்பதையே அந்த மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் உணர்த்துகின்றன. இதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இறுதிப் பருவத் தேர்வுகள் விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மிரட்டல் விடுப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: