கொரோனா ஊரடங்கால் ‘ஆக்டிவிட்டி மாஸ்டர்கள்’ 4 மாதமாக சம்பளமின்றி தவிப்பு: பள்ளிகள் ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

மதுரை: கொரோனா ஊரடங்கால் தென்மாவட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு கூடுதல் திறன் கற்பிக்கும் ‘ஆக்டிவிட்டி மாஸ்டர்கள்’ கடந்த 4 மாதங்களாக சம்பளமின்றி தவித்து வருகின்றனர்.  மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிக் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் ‘ஆக்டிவிட்டி கோர்ஸ்’ வகுப்புகள் நடத்தப்படுகிறது. கோ கரிகுலர் (சிசிஏ), எக்ஸ்ட்ரா கரிகுலர்(இசிஏ) என்றழைக்கப்படும் இவ்வகுப்புகளில், யோகா, கீபோர்டு, கராத்தே, ஓவியம், செஸ், கேரம்போர்டு, ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக் உள்பட 15வகையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கென தனித்தனி மாஸ்டர்கள் வாரத்தில் 2, 3 நாட்களுக்கு மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவர்.

 இந்த பயிற்சிகள் வழங்கும் ஆக்டிவிட்டி மாஸ்டர்களுக்கு, ‘நான் டீச்சிங் ஸ்டாப்’ என்ற முறையில் அந்தந்த பள்ளிகளின் நிர்வாகம் மாதம் ஒரு சம்பளம் வழங்கும். இந்த சம்பளமும் ஆண்டின் 10 மாதங்களுக்கே வழங்கப்படும். ஏப்ரல், மே மாத சம்பளம் இருக்காது. இக்காலங்களில் கோடை வகுப்புகள் உள்ளிட்டவைகளை நடத்தி இந்த பயிற்றுநர்கள் வருமானம் பெறுவர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் தென்மாவட்டம் முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்டஇந்த  ஆக்டிவிட்டி மாஸ்டர்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் கூறும்போது, ‘‘கடந்த பிப்ரவரி மாதம் சம்பளம் வழங்கியதோடு சரி. மார்ச் மாதத்தில் இருந்தே எந்த சம்பளமும் இல்லை. மிகுந்த சிரமத்தில் இருக்கிறோம்.

பள்ளிகளை நம்பியே எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. முழுமையாக தராவிட்டாலும், பள்ளி நிர்வாகங்கள் இந்த கொரோனா காலத்தில் ஊக்கத்தொகையாக குறைந்தது மாதம் ரூ.2 ஆயிரமாவது வழங்க வேண்டும்.  கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக சம்பளமின்றி கஷ்டப்படுகிறோம். கடன் வாங்கி குடும்பம் நடத்தி வருகிறோம். இப்போது வாழ்க்கை மீதே ஒரு அச்சம் வந்து விட்டது’’ என்றனர்.

Related Stories: