ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் பழுதடைந்த பழைய கால்நடை மருத்துவமனையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். மேலும், இங்குள்ள ஆரணி பேரூராட்சி அலுவலகம் அருகில் 50 வருடத்திற்கு முன்பு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த கால்நடை மருத்துவமனைக்கு ஆரணி, மங்களம், மல்லியங்குப்பம், புதுப்பாளையம், குமரபேட்டை, திருநிலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகள் உடல் நிலை பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்காக அதை வளர்ப்பவர்கள் கொண்டு வருவார்கள்.
இந்நிலையில், இந்த கால்நடை மருத்துவமனை மிகவும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு, இதன் மேற்கூரை தளத்தின் சிமெண்டு சிலாப்புகள் உடைந்து சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால், இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும்நிலை ஏற்பட்டது. எனவே, புதிய கால்நடை மருத்துவமனை கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு புதிய கால்நடை மருத்துவமனை பழைய கட்டிடத்தின்அருகில் அதன் வளாகத்திலேயே கட்டப்பட்டது. தற்போது, கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. இதற்கிடையில், பழைய கட்டிடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவது, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இரவு நேரத்தில் பாராக மாறி வரும் பழுதடைந்த கால்நடை மருத்துவமனையை அகற்ற வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.