இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லையென செவிலியர்கள் தர்ணா போராட்டம்!!!

இராமநாதபுரம்:  இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லையென செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என புகார் எழுந்துள்ளது. அங்கு பணிபுரியும் செவிலியர்கள் பலமுறை நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், குறிப்பிட்ட செவிலியர்களுக்கு மட்டும் தேவையான வசதிகளை செய்து தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த செவிலியர்கள் மருத்துவமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எந்த வித முன் அறிவிப்பும் இன்றி 2 செவிலியர்களை பணியிடமாற்றம் செய்ததற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தினந்தோறும் அதிகாலை முதல் மாலை வரை பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் அரசு மருத்துவமனையிலும் கொரோனா பிரிவிலும் பணிபுரியக்கூடிய செவிலியர்களுக்கு வேலை என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுவரை எந்த வித அடிப்படை வசதிகளும் செய்துதரவில்லை என செவிலியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கொரோனா தொற்று உச்சத்தில் உள்ள நிலையில் தற்போது செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: