பண்ணாரி சோதனை சாவடியில் லாரி டிரைவர்களிடம் லஞ்சம்: சமூக வலைதளங்களில் வைரல்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனை சாவடியில் லாரி டிரைவர்களிடம் சோதனை சாவடி ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோர் சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் அருகே வட்டார போக்குவரத்து துறை, காவல் துறை, மற்றும் வனத்துறை சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளன. இச்சாலை வழியாக தமிழகம், கர்நாடகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

சரக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்கிறதா என்பது குறித்தும் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் பண்ணாரி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சரிபார்த்து சோதனையிட்டு வாகனங்களை அனுமதிப்பது வழக்கம். இந்நிலையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை சோதனைச் சாவடியை கடந்து செல்ல வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி டிரைவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் பெறும் வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் சோதனைச்சாவடி பணியில் உள்ள ஊழியர்கள் லாரி டிரைவர்களிடம லஞ்சம் கேட்பதும், டிரைவர்கள் பணம் கொடுத்துவிட்டு அதற்கு எழுதி தர முடியுமா என கேட்பது தெரிகிறது. மேலும் 10 சக்கர லாரியா அல்லது 12 சக்கர லாரியா என விசாரிப்பதும் அதற்கு தகுந்தாற்போல் லஞ்சம் பெறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இரு மாநில எல்லையில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி டிரைவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: