சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி: தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!!

சென்னை: தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவல்துறையினருக்கு உதவியாக 1991-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது தான் போலீஸ் நண்பர்கள் குழு. அப்போது ராமநாதபுர மாவட்ட  காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரதீப் பிலிப், போலீஸ் நண்பர்கள் குழுவை முதல்முதலில் ஏற்படுத்தினார். தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நண்பர்கள் குழு உள்ளது. ஒவ்வொன்றிலும் தலா 20 பேர் வரை உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு என 34 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கின்றனர்.

போலீசுக்கும், பொதுமக்களுக்கு நல்லுறவை ஏற்படுத்தும் இணைப்பு பாலமாக இருப்பதே இதன் நோக்கம். பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள் நண்பர்கள் குழுவில் விரும்பி இணைந்தனர். பின்னர் மற்ற இடங்களுக்கும் இக்குழு விரிவடைந்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், திருவிழாக்களில் போலீசுடன் இணைந்து ரோந்து செல்வது போன்ற பணிகள் தரப்பட்டன. நாளடைவில் காவல்துறையின் அத்துமீறல், அடாவடி தனத்துக்கும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் துணை போகினர்.

அதன் உச்சமே சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே, வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்ட  நிலையில், போலீஸ் நண்பர்கள் குழு உறுப்பினர்களையும், கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பயன்படுத்த கூடாது என்றும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு பதில் ஊர்காவல் படையை பயன்படுத்திக்கொள்ளவும், பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து மாவட்ட எஸ்.பிக்களுக்கும் காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தியது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு குறித்து எதிர்மறையான அறிக்கையை காவல்துறை தலைவர் அரசுக்கு அளித்துள்ளார். டிஜிபி அளித்த அறிக்கை அடிப்படையில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: