தாமிரபரணி ஆற்றங்கரையோரம் கழிவுகள் குழிதோண்டி புதைக்கப்படுவதால், நீர் மாசடையுமென பொதுமக்கள் வேதனை!!!

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி மாவட்டம் கடந்தான்கோடு பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் கிலோ கணக்கிலான குப்பைகள் குழிதோண்டி புதைக்கப்படுவதால், குடிநீர் மாசடைவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நீரானது செந்நிறமாக மாறிவரும் நிலையில், தற்போது கொட்டப்படும் குப்பைகளாலும் தண்ணீர் மேலும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயன்படும் வகையில் இருப்பதுதான் தாமிரபரணி ஆறு.

இந்த தாமிரபரணி ஆற்றின் மூலம் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆற்றின் மூலம் குடிநீர் பிரச்சனைகள் தீர்வதோடு, விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் போதிய தண்ணீரை அளித்து வருகிறது. இந்நிலையில், தாமிரபரணி ஆற்றின் குளிக்கரை பகுதியில் 3க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் அமைந்துள்ளன. மேலும், இதன் கீழ் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் உள்ளன.

இந்நிலையில், தாமிரபரணி ஆற்றுடன் இணைந்துள்ள குடிநீர் கிணறுகளுக்கு அருகில் அமைந்துள்ள ஒருவருடைய தோப்பில், டன் கணக்கில் நகராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய கழிவுகளை 15 அடி ஆழத்திருக்கும் மேலாக குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன. மேலும், சில மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கழிவுகள் குழிதோண்டி புதைக்கப்படுவதால் தாமிரபரணி ஆறு மாசடைவதுடன், அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகளிலும் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும், கொரோனா தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில் குடிநீரில் கலக்கும் கழிவுகளால் புதிய நோய்கள் உருவாகுவதற்காக வாய்ப்புகள் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்தி, புதைக்கப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இதுவரை குப்பைகளை கொட்டியவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: