ஊரடங்கால் 100கோடிக்கு மேல் கேரளா வேட்டி, துண்டு சேலை ரகங்கள் தேக்கம்: ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் கலக்கம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் கேரள மாநில ஆர்டர் பெற்ற வேட்டி, துண்டு ரகங்கள் கோடிக்கணக்கில் தேக்கமடைந்துள்ளது. எனவே ஊரடங்கு தளர்வில் ஜவுளித்தொழில் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 6ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால்,   அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற பொருட்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் பொது போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளதால்  உற்பத்தி செய்த பொருட்களை கூட விற்க முடியாமல் உற்பத்தியாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  

ஊரடங்கு  அமலில் உள்ளதால்,ஜவுளித்தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தறிக்கூடங்கள் இயக்கமின்றி, முடங்கி கிடக்கிறது. ஏற்கனவே உற்பத்தி செய்த ஜவுளி ரகங்களை  கேரளா கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள குடோன்களில் சரக்குகள் அடுக்கப்பட்டு தேக்கமடைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை, உடையாப்பட்டி,ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கேரளாவில் ஆர்டர் பெறப்பட்டு வேட்டி, துண்டு, சேலை உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ரகங்கள் தயாரிக்கப்பட்டு கேரளா மாநிலம் முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.

அதேபோல்,  கோயில் கும்பாபிஷேகம், திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் தளபதி வேஷ்டி, துண்டுகள் மற்றும் இதர காட்டன் வேட்டி, சட்டை, துண்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகம் முழுவதும்  ஜவுளிகடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவில் சித்திரை விஷூ,ரம்ஜான் பண்டிகைகளுக்கும், கோயில் விழாக்களுக்கும் கோடிக்கணக்கில் ஆா்டர் கிடைக்கும். ஆனால் ஊரடங்கால், கடைகள் மூடப்பட்டு வியாபாரம் தடைபட்டது. இதனால் அங்கிருந்து எவ்விதமான ஆர்டரும் கிடைக்கவில்லை. இதனால் சேலம் மாவட்டத்தில்  கோடி கணக்கில் கேரளா ரக வேட்டி, துண்டு, சேலைகள்  தேக்கமடைந்துள்ளது.தமிழகத்திலும் எவ்விதமான  திருவிழாக்கள், கோயில் விழாக்களும் இல்லாததால் உற்பத்தி செய்த துண்டு, வேட்டி ரகங்களும் தேக்கமடைந்துள்ளது.

இந்த வகையில் கடந்த 4 மாதத்தில் மட்டும்   ₹100கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளது.

 இதுபற்றி சேலம் ஜவுளி உற்பத்தியாளர் பாபு கூறியதாவது: கொரோனா ஊரடங்கால்,  கடந்த 4 மாதமாக கேரளாவிற்கு  ஜவுளி ரகங்கள் அனுப்ப முடியவில்லை.  பண்டிகை வியாபாரமும் இல்லாததால், தற்போது ஜவுளி ரகங்களை அனுப்ப வேண்டாம் என ஜவுளி கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோயில் கும்பாபிஷேகம், திருவிழாக்கள் அனைத்தும் ரத்தாகி விட்டது. இதனால், வேட்டி, துண்டு வியாபாரம் அடியோடு நின்றுவிட்டது. ஊரடங்கால் மாதம் ₹30 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக ஜவுளி உற்பத்தி செய்ய நூல்,பாவு, கோன் வரத்து இல்லாததால், அந்த பணியும் அடியோடு நின்றுள்ளது.

தறித்தொழிலாளர்கள்,தொழில் இன்றி வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு குறைந்த பட்சம் வேலை கொடுக்கப்பட்டு வருகிறது.  வங்கியில் வாங்கி இருந்த வியாபாரம் கடனை செலுத்தினால் வட்டியை  சேர்த்து எடுத்து கொள்கின்றனர். தற்போது வியாபாரம் இல்லாத நேரத்தில் வட்டியை செலுத்த வேண்டியுள்ளது. ஊரடங்கிற்கு முன்பு கேரளாவுக்கு அனுப்பிய ஜவுளிக்கு பணத்தை கேட்டால்,அவர்கள் அங்கு வியாபாரம் இல்லை என கூறி அனுப்பிய சரக்கை திருப்பி அனுப்பி வைத்து விடுகின்றனர். சேலத்தில் 100க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களிடம் கோடிக்கணக்கில் ஜவுளி தேக்கம் அடைந்துள்ளது.  அதனால், ஊரடங்கு தளர்வின் போது, ஜவுளி தொழில் நடக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: