31 ஆண்டு அரசு மருத்துவராக பணியாற்றிய இரைப்பை, குடல்அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரமோகன் மரணம்

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை துறையை உருவாக்கிய மருத்துவர் சந்திரமோகன் மாரடைப்பால் மரணம் அடைந்தனர். சென்னை, கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் டாக்டர் சந்திரமோகன் (63). இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர். 31 ஆண்டுகள் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை  உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியுள்ளார். மேலும், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை துறையை தொடங்கி அதன் தலைவராக இருந்து உலக தரத்திலான சிகிச்சையை வழங்கினார். ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு ஏற்படும் உணவுக்குழாய் பாதிப்புக்கு நவீன சிகிச்சை அளிக்கும் முறையில் நிபுணத்துவம் பெற்றவர். ஏழைகளுக்கும் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்து வந்தார். இவரது சிகிச்சை முறை சர்வதேச அளவில் பல மருத்துவமனைகளில் பின்பற்றப்படுகிறது.

அரசு மருத்துவமனை ஓய்வுக்கு பின், தொடர்ந்து ‘ஈசோ இந்தியா’ என்ற அமைப்பை உருவாக்கி, அதில், இரைப்பை புற்றுநோய் குறித்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம், கட்டுரை போட்டி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.  குறிப்பாக, கிராமப்புறங்கள், மலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, இரைப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த அவருக்கு திடீரென  நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

* மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

குடல் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் புகழ்பெற்றவரான டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் மரணம் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. மருத்துவ துறைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் நோயாளிகளின் மீது தனி அக்கறை செலுத்தி அவர்கள் முழு நலன் பெற பாடுபட்ட டாக்டர் சந்திரமோகனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், மருத்துவ துறையினர் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: