திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனா பாதித்தவர் வளர்த்த நாய்கள் அடுத்தடுத்து பலி...! கொரோனா தொற்றினால் நாய்கள் உயிரிழப்பா? என கால்நடை அதிகாரிகள் பரிசோதனை!!!

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கொரோனா பாதித்தவர் வளர்த்த 2 நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் அவற்றிற்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 260ஆக உள்ளது. மேலும், சிகிச்சை பெற்று குண்டமடைந்தோரின் எண்ணிக்கை 90ஆக உள்ள நிலையில், தற்போது கொரோனா தாக்கத்தால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 170ஆக உள்ளது.

இதனால் திருப்பத்தூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்புகள் வெகுவாக உயர்ந்து வருகிறது. இதனால் திருப்பத்தூரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆம்பூர் அடுத்த மின்னூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருடைய குடும்பத்தினர் 9 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் வளர்த்து வந்த 2 நாய்கள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில், நாய்கள் உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, கால்நடை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது இறந்துபோன நாய்களிலிருந்து மாதிரியை சேகரித்து பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: