அரசு அலுவலகங்களில் 50% ஊழியர்களுக்கு அனுமதி: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு...!!!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக கடந்த ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. ஆனாலும், ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் பொதுமக்கள் அலட்சியம் காட்டியதன் விளைவாகவும், அரசின் தவறான நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் சென்னையில் மட்டும் கொரோனா  பாதிப்பு அதிகரித்து வந்த சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், 6வது கட்டமாக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு  ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. சென்னையில் நேற்று வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன்படி, அனைத்து தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் பணியுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத ஊழியர்களுடன் நகை, ஜவுளி கடைகள் இயங்கலாம். டீ கடை மற்றும் உணவு மற்றும் காய்கறி, மளிகை கடை காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கலாம். டாஸ்மாக் கடை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு பயன்படுத்தலாம். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.

மீன் ஸ்டால், சிக்கன் மற்றும் மற்ற இறைச்சி கடை, முட்டை கடை சமூக இடைவெளி கடைபிடித்து செயல்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இதையடுத்து அரசு அலுவலகங்களில் 30 சதவீத ஊழியர்களுடன் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் 50 சதவீத ஊழியர்கள் சுழற்சிமுறையில் பணிக்கு வர வேண்டும். அதாவது, முதல் இரண்டு நாள் ஒரு பேட்ஜ், அடுத்து வரும் 2 நாட்கள் ஒரு பேட்ஜ் என்கிற அடிப்படையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பெருநகர சென்னை காவல் எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேவையில்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், போலீசார் ரோந்து வாகனங்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளாக சென்று பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்களா என்பதை கண்காணித்து வருகின்றனர். முக்கிய பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: