தலைமை காவலருக்கு கொரோனா தொற்று: 2வது முறையாக காவல் நிலையம் மூடல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் 190 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதில், முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 30ம் தேதி 115 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 115 பேருக்கும் தொற்று இல்லை என தகவல் வந்தது. கடந்த மே 5ம் தேதி ஆரணி காவல் நிலைய போலீஸ்காரர் ஒருவருக்கு ஆரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒரு போலீஸ்காரருக்கு மட்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. சுகாதார துறையினர் ஆரணி காவல் நிலையத்தை சுற்றி கிருமிநாசினி தெளித்து பின்னர், காவல் நிலையத்திற்கு முதல் முறையாக சீல் வைத்தனர். பின்னர் தொடர்ந்து மீண்டும் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆரணி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் ஒருவருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு நேற்று மாலை கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரணி சுகாதாரத் துறையினர் நேற்று ஆரணி காவல் நிலையத்திற்கு கிருமி நாசினி தெளித்து காவல் நிலையத்தை 2வது முறையாக மூடி சீல் வைத்தனர். இதனால், தற்போது காவல் நிலையம் அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இயங்கி வருகிறது.

Related Stories: