சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து, அபராதம் வசூல்!!!

சேலம்: சேலத்தில் தடைகளை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் இன்று தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை வார இறுதி நாட்களில் இறைச்சிக் கடைகளில் அசைவப் பிரியர்கள் குவிந்து விடுவதோடு, அவர்கள் முகக்கவசம் அணியாமலும், ஒருவருக்கொருவர் 3 அடி இடைவெளியில் நின்று இறைச்சியை வாங்கிச் செல்ல வேண்டும் என்ற விதிகளையும் பின்பற்றாமலும், அலட்சியமாகச் செயல்பட்டு வந்தனர்.

வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்துவது, அந்தந்த இறைச்சிக் கடைக்காரர்களின் பொறுப்பு என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. ஆனால், கசாப்புக் கடைக்காரர்களோ தங்களிடம் உள்ள ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகள் விற்றுத் தீர்ந்தால் போதும் என்ற மனப்பான்மையில் வாடிக்கையாளர்களிடம் கெடுபிடி காட்டுவதில்லை. ஆனால் தற்போது, தமிழக அரசு அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. அதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் சேலத்திலும் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது, சேலம் மாநகராட்சிக்குப்பட்ட நெத்திமேடு பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த தகவலை அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் இறைச்சி கடைக்கு சீல் வைத்தனர். மேலும், கடையிலிருந்து 70 கிலோ இறைச்சி வகைகளை பறிமுதல் செய்ததோடு கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.  இதேபோல் அரிசிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த இறைச்சி கடைக்கும் சீல் வைத்த அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Related Stories: