செங்கல்பட்டில் லாரி மூலம் கடத்திவரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் போலீசாரால் பறிமுதல்!!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலி பதிவெண் கொண்ட லாரியில் கடத்திவரப்பட்ட 16 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கொரோனா முழு முடக்கத்தால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான காவலர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பால், காய்கறி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, மற்ற வாகனங்கள் அனைத்திலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மதுராந்தம் காவல் நிலையத்திற்குட்பட்ட முருங்கை என்ற இடத்தில் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர், சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை கண்டதும் லாரியை விட்டுவிட்டு தப்பி ஓடினார். பின்னர், காவல் துறையினர் அந்த லாரியை சோதனை செய்தனர். அப்போது, அதில் எரிசாராயம் இருப்பது தெரியவந்தது.

பின்னர், லாரியிலிருந்து 5320 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றிய காவல் துறையினர் அதன் மதிப்பு சுமார் ரூ.16 லட்சம் இருக்கும் என தெரிவித்துள்ளனர். எரிசாராயத்தை கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர் அந்த லாரியின் பதிவெண் போலி என்பதையும் கண்டறிந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: