ஊரடங்கு கெடுபிடியால் வரத்து குறைந்தது; கரும்பாலைகளில் வெல்லம் உற்பத்தி 30 சதவீதம் சரிவு: ஆலை உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு

சேலம்: கொரோனா ஊரடங்கு கெடுபிடிகளால் கரும்பாலைகளுக்கு, கரும்பு வரத்து குறைந்துள்ளது. இதனால் வெல்லம் உற்பத்தி 30 சதவீதம் சரிந்து, பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், விழுப்புரம், திண்டிவனம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பாலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 டன் அளவுக்கு வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெல்லம் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட வட மாநிலங்களுக்கு அதிகளவில் செல்கின்றன.

வெல்லம் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக நல்லமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் மார்ச் மாதம் பரவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெல்லம் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 4 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் கரும்பாலைகள் மூடப்பட்டன. இதனால் பல நூறு டன் வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 5ம் கட்ட ஊரடங்கில் சிறு, குறு தொழிற்சாலை நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.

ஆனால் வாகன போக்குவரத்து சரிவர இல்லாததாலும், கரும்பு வரத்து குறைந்ததாலும்  கரும்பாலைகளில் வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஓமலூரை சேர்ந்த வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தியாளர்கள் உள்ளனர். சேலத்தில் தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி, காமலாபுரம், ஓமலூர், மேச்சேரி,ஆத்தூர்,மல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பாலைகள் அதிகளவில் உள்ளன. இத்தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

இங்குள்ள கரும்பாலைகளுக்கு சேலம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்தும், இதைதவிர தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கரும்பு வருகிறது. கரும்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லம், சேலம் செவ்வாய்பேட்டை வெல்லம் மார்க்கெட், நாமக்கல் பிக்கிலிபாளையம், பவானி உள்பட பகுதிகளுக்கு கொண்டு செல்கிறோம். 30 கிலோ கொண்ட ஒரு சிப்பத்தை ₹ 1050 முதல் ₹ 1350 வரை விற்பனை செய்கிறோம்.இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு கரும்பாலைகள் மூடப்பட்டதால், வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

2 மாதத்திற்கு மேல் தொடர்ந்து மூடப்பட்டு இருந்ததால் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்து வருமானம் இல்லாமல் தவித்தனர். ஆலை உரிமையாளர்களுக்கும் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

தற்போது கரும்பாலைகள் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் வெல்லம் உற்பத்திக்கு ஏற்ப கரும்பு வரத்து இல்லை. மாவட்டம் விட்டு, மாவட்டம் கரும்பு கொண்டு செல்ல ஏராளமான கெடுபிடிகள் உள்ளன. மேலும் தற்போது கரும்பு விளைச்சலும் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் கரும்பாலைகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 30 முதல் 40 சதவீதம் வெல்லம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெல்லம் ஏலம் எடுக்க வியாபாரிகள் அதிகளவில் வருகை தருவதில்லை. கொரோனாவுக்கு பயந்து வெல்லம் உற்பத்தியாளர்களும் வெல்லத்தை விற்பனைக்கு கொண்டு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் மார்க்கெட்டுக்கு வெல்லம் வரத்து சற்று குறைந்துள்ளது. இவ்வாறு வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறினர்.

Related Stories: