சாத்தான்குளம் வழக்கில் நீடிக்கும் மர்மங்கள்!: ஜெயராஜ், பென்னிக்சிற்கு உயர் சிகிச்சை அளிக்காதது ஏன்?..மருத்துவ அறிக்கை எழுப்பும் கேள்விகள்

தூத்துக்குடி: போலீஸ் கொடூரமாக தாக்கியதில் உயிருக்கு போராடிய ஜெயராஜ், பென்னிக்சிற்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியது மருத்துவ அறிக்கையில் அம்பலமாகியிருக்கிறது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பென்னிக்ஸ் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மூச்சுத்திணறல், உயர் ரத்த அழுத்தம், இதய துடிப்பு அதிகமாக இருந்ததாக மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்னிக்சிற்கு சிகிச்சை அளிக்க மருத்துவ நிபுணர்களிடம் எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை.

பின்புறத்தில் பலமான காயத்துடன் அனுமதிக்கப்பட்டவரை கூடுதல் வசதி கொண்ட மருத்துவமனைக்கு மாற்றி உயர் சிகிச்சை அளிக்கவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 நிமிடத்தில் பென்னிக்ஸ் உயிரிழந்துவிட்டார். அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அனுமதிக்கப்பட்ட ஜெயராஜ்-க்கு உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடியிருந்ததும் மருத்துவ குறிப்பில் இடம்பெற்றிருந்தது. மகன் உயிரிழந்த பின்னர், மிக மோசமான நிலையில் தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த போதும், மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறவில்லை.

ஜெயராஜை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர் சிகிச்சையில் ஜெயராஜிற்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துள்ளது. அதிகாலையில் ஜெயராஜிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை பணியில் இருந்த செவிலியர்கள் பார்த்ததாக மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தந்தை, மகன் உயிரிழந்ததற்கான காரணங்கள் மருத்துவ குறிப்பில் தெளிவாக இடம்பெறாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Related Stories: