தடுப்பு மருந்து விஷயத்தில் அவசரம் காட்டக்கூடாது: நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி:  கொரோனா தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் வெளியிட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இலக்கு நிர்ணயித்துள்ள  நிலையில், இந்த விஷயத்தில் அவசரம் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத்  பயோடெக் நிறுவனம் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் கோவாக்சின் என்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு  முழுவதும் உள்ள 12 மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகளில் மனிதர்களின் உடலில் செலுத்தி இந்த மருந்து பரிசோதனை நடத்தப்பட  உள்ளது. சுதந்திர தினத்தன்று புதிய மருந்தை அறிமுகம் செய்வதற்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக நேற்று முன்தினம்  அறிவித்தது.

இதே நாளில் அகமதாபாத்தை சேர்ந்த ஜைடல் கடில்லா என்ற மருந்து நிறுவனம் மனித உடலில் செலுத்தி சோதனை செய்வதற்கு மருந்து  கட்டுப்பாட்டு தலைமையகத்தின் ஒப்புதலை பெற்றுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு  அவசரம் காட்டினால் ஆபத்தில் முடியக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். வைராலஜிஸ்ட் ஷாமீத் ஜமீல் கூறுகையில்,  ‘‘நான்கு வாரங்களில் தடுப்பூசி சோதனையை வேகமாக கண்காணித்தல் என்பது சாத்தியமில்லாதது” என்றார்.  வைராலஜிஸ்ட் உபாசனா ரே  கூறுகையில், ‘‘விரைந்து செயல்பட்டாலும் அதிகப்படியான அழுத்தமானது பொது பயன்பாட்டிற்கான சாதகமான தயாரிப்புக்கு வழிவகுக்காது’’ என்றார்.  

நோயெதிர்ப்பு நிபுணர் சத்திய ஜித் ராத் கூறுகையில்,”தடுப்பூசியின் முதல்கட்ட சோதனைகள் சிறிய அளவிலானவை. தடுப்பூசி மனிதர்களுக்கு  பாதுகாப்பானதா என்பதை மட்டுமே இதில் மதிப்பீடு செய்ய முடியும். ஆனால் இரண்டாவது கட்ட சோதனை என்பது பல நூறு பிரிவுகளை  உள்ளடக்கியுள்ளது. மேலும் முக்கியமாக செயல்திறனை மதிப்பிடுவதற்கு உதவும். இறுதி கட்டத்தில் தடுப்பூசியின் செயல்திறனை ஒரு குறிப்பிட்ட  காலத்தில் மதிப்பீடு செய்வது என்பது பல ஆயிரம் மக்களை உள்ளடக்கியது. இது பல மாதங்கள் நீடிக்கலாம்’’ என்றார்.

* அவசரம் காரணமாக அடுத்தடுத்த வழிமுறைகளை தவிர்ப்பது ஆபத்தை விளைக்கும் அல்லது மோசமான தயாரிப்புக்கு வழி வகுக்கக்கூடும்.

* தரத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.

* மருந்தை அறிமுகம் செய்வதில் முதல்நபராக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஆனால் அது மேட் இன் இந்தியாவாக இருக்க  வேண்டும், உலகம் முழுவதும் நம்பக்கூடியதாக இருப்பது அவசியமாகும் எனவும் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

Related Stories: