புதுச்சேரியில் ரவுடிகள் இறுதி ஊர்வலத்தில் விதிமீறல்!: ஊரடங்கை மீறி 100 வாகனங்கள் அணிவகுப்பு!!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டவர்களும், 100க்கும் மேற்பட்ட வாகனங்களும் அணிவகுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை அடுத்த வரதாவூர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருக்கும் புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த அருண் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முரளி தனது நண்பர் சந்துருவுடன் சேர்ந்து அருணை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதற்காக ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பிள்ளையார்குப்பம் பகுதி முழுவதும் சுற்றி திரிந்தனர்.

 இதையடுத்து அருண் தன்னை கொலை செய்ய வந்த முரளி மற்றும் சந்துருவை அடித்தே கொலை செய்தார். தொடர்ந்து, இருவரின் உடலையும் வில்லியனூர் போலீசார் பிரேத பரிசோதனை செய்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அடுத்து, முரளியின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் வரிதாவூரில் அவரது உடல் அடக்கம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முரளியின் நண்பர்கள், ஆதரவாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் 100 மோட்டார் வாகனங்களில் வந்து பங்கேற்றனர். இந்த காட்சி தற்போது புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதியில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் இறப்பு நிகழ்வில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று அரசு உத்தரவு உள்ளது. இதையும் மீறி 500க்கும் மேற்பட்டவர்கள் முரளியின் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த உடல் அடக்கம் நிகழ்வில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இதுகுறித்து போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி இறுதி சடங்கில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றது குறித்து விழுப்புரம் கண்டமங்கலம் போலீசார் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.

இதுவே தற்போது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இறுதி சடங்கில் அதிகளவில் மக்கள் கூடுவதால் கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது. சுமார் 1 கிலோ மீட்டர் வரையில் 100 வாகனங்கள் அணிவகுத்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: