கொரோனாவுக்கு முடிவு கட்ட மத்திய அரசு அதிவேகம் சுதந்திர தினத்தில் புதிய மருந்து: மனிதர்களுக்கு 7 முதல் பரிசோதனை

புதுடெல்லி: உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அறிமுகப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திட்டமிட்டுள்ளது. இதனால், பரிசோதனைகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் உலககெங்கிலும் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்கா கண்டுபிடித்துள்ள புதிய தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்து இருப்பதாக நேற்று முன்தினம் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவிலும் பல நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில், இந்திய மருந்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், (ஐசிஎம்ஆர்) ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, முதல் கட்டமாக விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 12 மருத்துவ நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த பரிசோதனைகளை ஜூலை 7ம் தேதிக்குள் தொடங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பரிசோதனை நிறுவனங்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், ‘இந்தியா உருவாக்கி உள்ள முதல் தடுப்பூசி இது. அதோடு மிக உயர் மட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வரும் முன்னுரிமை திட்டங்களில் ஒன்றாகும். தற்போதைய சூழலில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டியது மிக மிக அவசியமாகி உள்ளது. எனவே, பரிசோதனை நிறுவனங்கள் தீவிரமாக பணியாற்றி, வரும் 7ம் தேதிக்குள் பணிகளை தொடங்கி விட வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, தடுப்பூசியை பயன்பாட்டில் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பரிசோதனைகள் விரைவாகவும் துல்லியமாகவும் முடிக்கப்பட வேண்டியது அவசியம்,’ என ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

* சுதந்திர தினத்தில்...

ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினமாகும். அன்றைய தினத்தில் புதிதாக கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக, இவற்றை கண்டுபிடித்த விஞ்ஞானிகள், மருந்துவ பரிசோதனைகள் நடத்த உள்ள மருத்துவமனைகளை வேகப்படுத்தி வருகிறது.

* இந்தியா உருவாக்கி உள்ள முதல் தடுப்பூசி இதுதான்.

* இது, மருந்து கண்டுபிடிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து, உயர் மட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

* ‘கோவாக்சின்’ மருந்து மனிதர்களுக்கு செலுத்தும் திட்டம், வரும் 7ம் தேதிக்குள் தொடங்கப்பட உள்ளது.

* ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் இந்த பரிசோதனைகள் முடிக்கப்பட்டு, தடுப்பூசியை பயன்பாட்டில் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: