மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கொரோனாவுக்கு பலி: மு.க.ஸ்டாலின் இரங்கல்

மதுராந்தகம்: மதுராந்தகம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கொரோனாவுக்கு பலியானார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் மிகவும் பிரபலமான டாக்டர்கள் குடும்பத்தை சேர்ந்தவர் சுகுமார் (52). இவர் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து, மதுராந்தகத்தை சேர்ந்த டாக்டர்கள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் அவர் வசித்து வந்த வீட்டுக்கு அருகே அவரின் உருவப் படத்தை வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இறந்துபோன, டாக்டர் சுகுமாரின் மாமனார் மதுராந்தகம் பகுதியில் பிரபலமான மருத்துவர். அவரது மனைவியும் இப்பகுதியில் பிரபலமான மருத்துவர். மிகப்பெரிய மருத்துவர்கள்குடும்பத்தில் உயிரிழப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட மருத்துவர் வீட்டின் முன்பு யாரும் செல்லாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு  சுகாதார பணிகளை மதுராந்தகம் நகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மதுராந்தகம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு மிகவும் வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் மரணம்- கொரோனா சிகிச்சையில் முன்கள வீரர்களாக இருப்போரை பாதுகாப்பதில் அதிமுக ஆட்சி தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தின் அடையாளமாகும். அரசின் இதுபோன்ற தோல்விகள், கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர் ஆகியோருக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி, நோய்த் தடுப்பில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். அரசு தலைமை மருத்துவர் சுகுமாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: