அடிக்கடி உரிமையாளரை மாற்றும் வாடகைதாரருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க யோக்கியதை இல்லை: திமுக துணை பொதுச்செயலாளர் கண்டனம்

சென்னை:  அடிக்கடி உரிமையாளரை மாற்றும் வாடகைதாரருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க யோக்கியதை இல்லை என்று திமுக துணைப் பொதுச்செயாளர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா காலத்தில் மக்களுக்கு யார் உதவி செய்தாலும், அதை வரவேற்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை. அதிலும் எதிர்க்கட்சி, மாபெரும் “ஒன்றிணைவோம் வா” என்ற மக்கள் இயக்கத்தை நடத்திய போது- அதை வரவேற்க மனமில்லை என்றாலும், கொச்சைப்படுத்தும் கொடுமையான அரசு, இங்குள்ள அதிமுக அரசு. அமைச்சர் உதயகுமாருக்கோ- முதலமைச்சருக்கோ மக்கள் பணியில் அக்கறை இல்லை. மாநில பேரிடர் மேலாண்மைத் தலைவரான முதலமைச்சரும், உறுப்பினரான உதயகுமாரும் படுதோல்வி அடைந்து, நிர்கதியாக நிற்கிறார்கள்.

பொதுவாழ்வில் இருப்போரை முடக்கிப் போட அறிக்கைகளை விடுகிறார்’ என்று கூறும் அமைச்சர் உதயகுமார், பொது வாழ்வு என்றால், கிலோ என்ன விலை என்று கேட்பவர். பாரத் நெட் டெண்டர் திட்ட ஊழல் இன்றைக்கு டெல்லி செங்கோட்டை வரை அதிமுக அரசின் மானம் காற்றில் பறக்கிறது. ஊழலில் ருசி பார்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர் உதயகுமார், மத்திய அரசு, டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்ட பிறகும், ‘மீசையில் மண் ஒட்டவில்லை’ என்று பேசுவது அருவருப்பின் அடையாளம். இன்னொரு அமைச்சர், அவர் பெயர் பாண்டியராஜன். பிறப்பிலேயே கட்சி தாவும் கலையுடன் அவதரித்தவர்.

இனி சந்திரமண்டலத்தில் புதிதாக ஒரு கட்சி துவங்கினால் அங்கும் துண்டு போடக் காத்திருந்து- தன்மானத்தை விலை பேசுபவர். அவரெல்லாம் எங்கள் தலைவர் விடும் அறிக்கைகளைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. முதலமைச்சர் எடுக்கும் முடிவுகளை தெரிந்து கொண்டு முன்கூட்டியே ஆலோசனைகள் என்ற பெயரில் அறிக்கைகளை விடுகிறார் என்று பேட்டி கொடுக்கிறார். உங்கள் முதலமைச்சரின் முடிவு எடுக்கும் ரகசியம் எங்கள் தலைவருக்கு தெரிகிறது என்று சொல்வதற்கே உங்களுக்கு வெட்கமாக இல்லையா.

அமைச்சர்கள் உதயகுமாரும், பாண்டியராஜனும் பேட்டி என்ற பெயரில் பிதற்ற வேண்டாம். கொரோனா கால மக்கள் பணியில் ஒரு பிரதான எதிர்க்கட்சி- ஒன்றிணைவோம் வா என்று, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்தி மக்களின் பட்டினியைப் போக்கப் பாடுபட்டுள்ளது என்றால்- இந்தியாவிலேயே அது திமுக மட்டும்தான். எங்கள் கழகத் தலைவர் மட்டும் தான். நீங்கள் எல்லாம் சாயம் வெளுத்துப் போன ஜால்ரா பேர்வழிகள். சந்தர்ப்பவாதிகள். அரசியல் உலகம் வெட்கப்பட வேண்டிய பேர்வழிகள் என்று தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: