கொள்ளிடம் அருகே புதிதாக கட்டப்பட்ட கதவணையில் நீர் கசிவு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கதவணையில் இருந்து நீர் கசிந்து வெளியேறுவதை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தற்காஸ் கிராமத்தில் கிட்டியணை உப்பனாற்றின் குறுக்கே தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி கடந்த 7 மாதங்களுக்கு முன் தொடங்கியது. இப்பணி கடந்த 10 நாட்களுக்கு முன் முடிந்தது. இந்த பாலத்திற்கு இன்னும் திறப்பு விழா நடக்கவில்லை. இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் உள்ள 19 கதவணைகளில், சில கதவுகளில் கசிவு ஏற்பட்டுள்ளதால் அதன் மூலம் உப்பு நீர் ஆற்றுக்குள் செல்கிறது.

300 மீட்டர் கரையை பலப்படுத்தாததை கண்டித்தும், குடியிருப்புகளிலிருந்து மழைநீர் ஆற்றுக்குள் வடியும் வகையில் வடிகால் வாய்க்கால் அமைக்காததை கண்டித்தும் புதுப்பட்டினம் விவசாய சங்க தலைவர் தங்கமணி, செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் விஜயகோதண்டராமன் மற்றும் விவசாயிகள், கிராமமக்கள் புதிய கதவணை அருகே உப்பனாற்றின் கரையில் நின்று அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க முடிவு செய்தனர்.

Related Stories: