தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!

சேலம்: சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களை அங்கீகரித்து மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முடியாது.

இந்நிலையில் சேலம் தம்மம்பட்டியில் தயாரிக்கப்படும் மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. வீடு, வணிக வளாகங்களின் அழகை மெருகூட்டுவதில் சிற்பங்களுக்கு இணை ஏதுமில்லை. குறிப்பாக, ஒரு அறையை அல்லது அரங்கை அழகுபடுத்துவதில் மரச் சிற்பங்களுக்கு முக்கிய இடமுண்டு. இதனால், கடவுள் சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலான மரச் சிற்பங்களுக்கு கலை பிரியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். தமிழகத்தைப் பொறுத்தவரை சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சிலை வடிவமைப்பானது சிறப்பாக செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் மரக்கட்டைகளில் செதுக்கப்படும் இந்து கடவுள்கள், புராதன நிகழ்வுகள் மற்றும் கதவு வடிவமைப்புகள் போன்றவை நேர்த்தியாகவும், தத்துரூபமாகவும் இருப்பதால் அவை உள்நாடுகளில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரசித்தி பெற்ற தம்மம்பட்டி மரச்சிற்பங்கள் தமிழகத்தில் இருந்து புவிசார் குறியீடு பெரும் 36வது பொருளாகும். இதன் மூலம் போலிகள் உருவாவது தவிர்க்கப்பட்டு உண்மையான பொருட்களை நுகர்வோர் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: