ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் அலுவலகம் மூடல்: மேலும் பலர் பாதிக்கப்படலாம் என்பதால் ஊழியர்கள் அச்சம்

சென்னை: ஆதிதிராவிட நலத்துறையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், எழிலக வளாகத்தில் ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

எழிலகம் வளாகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வளாகத்தில் இணைப்பு கட்டிடத்தில் ஆதிதிராவிடர் ஆணையர் மற்றும் பழங்குடியினர் ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், உதவியாளர், கண்காணிப்பாளர் உட்பட 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஆதிதிராவிடர் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 6 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அலுவலகத்தில் ஒரேஇடத்தில் தான் அனைத்து ஊழியர்களும் வேலை செய்து வருகின்றனர். இதனால், மேலும் பலர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, கொரோனா தொற்று பரவலை தடுக்க நேற்று ஆதிதிராவிட நல ஆணையர் அலுவலகம் மூடப்பட்டன. இது குறித்து ஆதிதிராவிட நல ஆணையர் அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேப்பாக்கம் எழிலகம் இணைப்பு கட்டிடத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிட நல ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களில் நேற்று ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மற்றும் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாலும், அரசாணையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பணியாளர்களின் நலன் கருதி கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆதிதிராவிட நல ஆணையரகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து 2 நாட்கள் அலுவலகத்தினை மூடிட ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: