புரசைவாக்கத்தில் நள்ளிரவு பரபரப்பு பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி: 7 இளம் ரவுடிகள் சுற்றிவளைப்பு

சென்னை: புரசைவாக்கத்தில் சாலையின் நடுவே இளம் ரவுடிகள் புடைசூழ பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 7 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். கொரோனா பரவலை தடுக்க சென்னை முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே  வரக்கூடாது என்று போலீசார் எச்சரித்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், புரசைவாக்கத்தில் இளம் ரவுடிகள் சிலர் நடுரோட்டில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புரசைவாக்கம் பிரிக்ளின் சாலை, ஆர்.கே.புரம் ஹவுசிங் போர்டில் வசிக்கும் இளம் ரவுடிகள் சிலர், நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு பொன்னன் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில்  ஆட்டம் பாட்டத்துடன் ரவுடி கவுதம் என்பவரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளனர். அப்போது, கவுதம் நண்பர்கள் புடைசூழ மது விருந்துடன் 2 அடி நீள பட்டாக்கத்தியால் தனது பிறந்தநாள் கேக் வெட்டி நண்பர்களான இளம் ரவுடிகளுடன் ஆரவாரம் செய்துள்ளார்.  இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வேப்பேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வேப்பேரி இன்ஸ்பெக்டர் நாகராஜ் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது, பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய கவுதம் உள்ளிட்ட 8 இளம் ரவுடிகள் போலீசாரை பார்த்ததும்  அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று, கவுதம் கூட்டாளிகளான 7 இளம் ரவுடிகளை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள், பட்டாளம் பரசுராமன் தெருவை சேர்ந்த மகேந்திரன் (31), எழும்பூர் பெருமாள் ரெட்டி தெருவை சேர்ந்த ஹரிஷ்குமார் (22), ஓட்டேரி திருவிக தெருவை சேர்ந்த விக்னேஷ் (21), ஆர்.கே.புரம் பிரிக்ளின் சாலையை சேர்ந்த விஜய் (22), புவனேஷ்வரன் (23), புரசைவாக்கம் பொன்னன் தெருவை சேர்ந்த சாமுவேல் (23), விக்னேஷ் (18) ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். இவர்கள் மீது சிறு சிறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கிய குற்றவாளியான கவுதம் (28) உள்ளிட்ட சில ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் புரசைவாக்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: