மாஜிஸ்திரேட் மிரட்டல் வழக்கு ஒத்திவைப்பு.! மீண்டும் சாத்தான்குளம் காவல் நிலையத்தை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்கிறார்!!

சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மீண்டும் ஆய்வு சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பாக மீண்டும் மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியுள்ளார். பல்வேறு ஆவணங்கள் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபரப்பான அறிக்கையை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்தார். அதனையடுத்து மீண்டும் காவல் நிலையத்தை அய்வு செய்து வருகிறார்.

ஜூலை 2-க்கு வழக்கு ஒத்திவைப்பு:

தந்தை மற்றும் மகன் உயிரிழந்த வழக்கை விசாரிக்க சென்ற மாஜிஸ்திரேட் மிரட்டல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜூலை 2-ம் தேதிக்கு நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இன்று மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் அறிக்கை:

* ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்-ஐ விடிய விடிய லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

* சாத்தான்குளம் காவல்துறையினர் தடயங்களை அழிக்க முயன்றனர் எனவும்., விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

* சிசிடிவி காட்சி பதிவுகள் அழிக்கப்பட்டடிருந்தன.

* கூடுதல் எஸ்பியும், டிஎஸ்பியும் நிகழ்விடத்தில் இருந்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை.

* சாட்சி ஆவணத்தில் கையெழுத்திட மறுத்த பெண் காவலர், உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்த பின்னரே கையெழுத்திட்டார்.

* லத்தி மற்றும் மேஜையில் ரத்தக் கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரியவந்துள்ளது.

* லத்தியை கேட்டபோது காவலர் மகாராஜன் முன்னுக்கு பின் முரணாக பேசினார்

* காவலர் மகாராஜனிடம் லத்தியை கேட்டுக்கொண்டிருந்த போது அங்கிருந்த மற்றொரு காவலர் தப்பியோடிவிட்டார்

* ரத்தக்கறை மற்றும் முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

காவலர் ரேவதி பாதுகாப்பு:

சாட்சி அளிக்கையில் காவலர் ரேவதி அச்சத்துடன் இருந்தார். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.  நீதித்துறை நடுவரின் அறிக்கையை அடுத்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தடயவியல் நிபுணர்கள் ஆய்வு:

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி தடயங்களை சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணத்தில் விசாரணை விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் காவல்நிலையம்:

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பு அதிகாரியாக செந்தூர்ராஜன் நியமிக்கப்பட்டார். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செந்தூர்ராஜன் காவல் நிலைய பொறுப்பாதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய்த்துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 24 மணி நேரமும் பணயில் இருப்பார்கள். தாசில்தார் செந்தூர்ராஜன், துணை தாசில்தார் சாமிநாதன் ஆகிய இருவரும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.  

சிபிசிஐடி விசாரணை தொடங்க ஆணை:

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை இன்றே தொடங்க மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அனில்குமார் விசாரணையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணை தொடங்குவதற்குள் தடயங்களை அழிக்க வாய்ப்பு இருப்பதால் நீதிபதிகள் சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எஸ்.பி மாற்றம்:

சாத்தான்குளம் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்துவரும் நிலையில், தூத்துக்குடி எஸ்.பி மீது தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது. எஸ்.பி அருண் பாலகோபாலன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து விழுப்புரம் எஸ்.பி.ஆக இருந்த ஜெயக்குமார் தற்போது தூத்துக்குடி எஸ்.பி. ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: