மக்கள் நடத்தும் போர்: பிரதமர் மோடி பெருமிதம்

வாஷிங்டன்: ‘இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போர் மக்களால் வழி நடத்தப்படுகிறது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர்கள் கூட்டமைப்பில் 80 ஆயிரம் இந்திய மருத்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதன் கூட்டத்தில் காணொலி காட்சி மூலமாக நேற்று பங்கேற்று, பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா பரவலை இந்தியா மிக சிறப்பாக கையாண்டு வருகிறது.

அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 350, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் 10 லட்சம் பேருக்கு 600 பேர் இறந்தார்கள். ஆனால், உலகின் 2வது பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 10 லட்சம் பேரில் 12 பேருக்கும் குறைவானவர்களே இறந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிரானப் போரில் உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரானப் போரை மக்கள் வழி நடத்துகின்றனர். கொரோனா பரவலைக் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்கு தொடக்கத்திலேயே ஊரடங்கை அமல்படுத்தியதுதான் காரணம். பெரும்பாலான கிராமப்புறங்களில் கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் பேசினார்.

* தற்சார்பு நாடாக மாற ஊரடங்கு உதவுகிறது

மோடி மேலும் பேசுகையில், ‘‘இந்த ஊரடங்கு வாய்ப்பை தற்சார்பு பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதற்கு இந்தியா பயன்படுத்தி கொண்டுள்ளது. இதனால், மருத்துவ உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஆரம்பத்தில் ஒரு ஆய்வகம் மட்டுமே இருந்தது. இப்போது அது ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் பாதுகாப்பு உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இப்போது, அவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. வாரத்துக்கு 30 லட்சம் என்-95 முகக்கவசம், 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன,’’ என்றார்.

Related Stories: