4ம் கட்ட வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடு பறக்கிறது 170 சிறப்பு விமானங்கள்: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பினால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை திரும்ப அழைத்து வரும், வந்தே பாரத் திட்டத்தின் 4வது கட்டத்தின் கீழ், 170 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதுமான ஊரடங்கு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு மார்ச் 23ம் தேதி முதல் உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். வந்தே பாரத் திட்டத்தின் 3வது கட்டத்தின் கீழ் ஏர் இந்தியா 495 விமானங்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் 4வது கட்ட விமான விவரங்கள் குறித்த தகவல்களை மத்திய விமானப் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 4வது கட்ட வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, கென்யா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தான், சவுதி அரேபியா, வங்கதேசம், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, மியான்மர், ஜப்பான், உக்ரைன், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட இருக்கிறது. இதற்காக ஜூலை 3ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், 170 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையே 38, இந்தியா-அமெரிக்கா இடையே 32, இந்தியா-சவுதி அரேபியா இடையே 26 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: