முழு ஊரடங்கில் மருத்துவர்கள், அதிகாரிகள் என போலி பாஸ் மூலம் சுற்றிய 58 பேர் மீது வழக்கு பதிவு: 10 நாளில் 52 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நேற்றைய தினத்தில் மருத்துவம், அரசு பணியாளர்களை தவிர மற்றவர்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டது. இதை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுட்டனர்.

அதன்படி சென்னை முழுவதும் அமைக்கப்பட்ட 288 சோதனை சாவடிகளில் இ-பாஸ் இல்லாமல் வந்த வாகனங்களை போலீசார் வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர். மேலும், மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்று தங்களது வாகனங்களில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி வந்த 58 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 58 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 10 நாட்களில் தடை உத்தரவை மீறியதாக 60,131 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து 52,234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சுற்றியதாக 10 நாட்களில் 23,704 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

* துன்புறுத்துவது சட்டப்படி தவறு

சென்னை தங்க சாலையில் முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று மதியம் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: போலியாக பாஸ் தயாரித்து அதை வாகனத்தில் ஒட்டி வெளியில் சுற்றித்திரிவது கடுமையான குற்றம். நாம் கட்டுப்பாடாக இருந்தால் கொரோனாவை வெல்ல முடியும். காவல் நிலையங்களுக்கு கைது செய்து அழைத்து வருபவர்களை என்ன மாதிரியான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என சட்டப்படி மற்றும் உச்ச நீதிமன்ற அறிவுத்தல்படி நடைமுறை இருக்கிறது. குறிப்பாக அடிப்பது, துன்புறுத்துவது கூடாது. தமிழக காவல் துறையினர் யார் மனதையும் புண்படுத்தும்படி பேசவே கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறோம். போலீசார் யாரையும் அடிப்பது, துன்புறுத்துவது சட்டப்படி தவறு. இதை தொடர்ந்து அனைத்து அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: