தூத்தூரில் இருந்து இடம்பெயரும் மக்கள்: குமரி கடலோர கிராமங்களில் கொரோனா பரவும் அபாயம்

நாகர்கோவில்: தூத்தூர் பகுதியில் இருந்து இடம்பெயரும் மக்களால் குமரி மாவட்டத்தில் பிற கடலோர கிராமங்களிலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டபோதிலும் கடலோர கிராம பகுதிகளில் கொரோனா பரவாத நிலை இருந்தது.  தூத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில் அவரிடம் இருந்து அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு பரவ தொடங்கியது. இதில் தூத்தூர் பகுதியில் மட்டும் 59 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த பகுதியில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தூத்தூரில் இருந்து அருகே உள்ள சின்னத்துறை கிராமத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. மேலும் குளச்சல் துறைமுக பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சின்னமுட்டம், வள்ளவிளை உள்ளிட்ட கடலோர கிராமங்களிலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. பலரது பரிசோதனை முடிவுகள் வரவிருக்கிறது. இந்தநிலையில் தூத்தூர் பகுதியில் பிற இடங்களில் வசிக்கின்ற மக்கள் தங்களுக்கு கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தில் மாவட்டத்தில் உள்ள பிற மீனவ கிராமங்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைய இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் முன்னரே இடம்பெயருவதால் மாவட்டத்தில் பிற கடலோர கிராமங்களிலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளாக கடலோர கிராமங்கள் விளங்குகின்றன. இதனால் பாதிப்பு வேகமாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் ஒரே பகுதியில் ஒரு நபரிடம் இருந்து அதிபட்ச தொற்று ஏற்பட்ட பகுதியாக தூத்தூர் விளங்குகிறது. இதற்கிடையே கொரோனா தொற்று கண்டறியப்பட்ட கடலோர கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கிராமங்களை விட்டு வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் பங்குதந்தையர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் இதனை பொருட்படுத்தாமல் பலரும் இடம்பெயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்து தங்களை பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொண்டால் மட்டுமே கொரோனா வைரஸ் கடலோர கிராமங்களில் மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் இடம்பெயருவதை கண்காணிக்கவும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: