வழக்கு போடாம இருக்கணும்னா காச கொடு... பிளாக்கில் சரக்கு விற்றவரிடம் ரூ18 ஆயிரம் மாமூல் வாங்கிய போலீஸ்காரர்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடை வாசலில் பணம் பறித்த சிறப்பு பிரிவு போலீஸ்காரரை பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் டாஸ்மாக் கடைகள் இல்லாத கிராமப்பகுதிகளில் சிலர் டாஸ்மாக் மது பாட்டில்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த போதிலும் கிராமங்களில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில், அரசர்குளம் கீழ்பாதியைச் சேர்ந்த ஒருவர் பிளாக்கில் மதுபாட்டில்களை விற்க, அறந்தாங்கி அடுத்த பெருங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் 92 மதுபான பாட்டில்களை வாங்கிக்கொண்டு பைக்கில் வந்துகொண்டிருந்தார்.

டாஸ்மாக் கடையிலிருந்து சிறிது தூரம் வந்ததுமே அங்கு காரில் வந்த குற்றப்பிரிவு பிரிவை சேர்ந்த ஒரு போலீஸ்காரர், அவரிடம் மதுபாட்டில்களை பறித்துக்கொண்டு, வழக்குப்பதியாமல் இருக்க ரூ25 ஆயிரம் கேட்டுள்ளார். உடனே அவரும் பயத்தில் ஊருக்கு சென்று எப்படியே புரட்டி ரூ18 ஆயிரத்தை எடுத்து வந்து போலீஸ்காரரிடம் கொடுத்துள்ளார். இதேபோல அந்த போலீஸ்காரர் இப்பகுதிக்கு பலமுறை வந்து மதுபாட்டில்களை வாங்கி செல்பவர்களை மிரட்டி பலரிடமும் பணமும், மதுபாட்டில்களையும் பறித்து சென்றதை அறிந்த பெருங்காடு பகுதி பொதுமக்கள் அந்த போலீஸ்காரர் மீது சந்தேகம் அடைந்து ஆவுடையார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் ஆவுடையார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு வந்து, மதுபாட்டில், பணத்தை பறிகொடுத்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் மது, பணம் பறித்தது க்ரைம் இன்வெஸ்டிகேஷன் விங்கை சேர்ந்த போலீஸ்காரர் என்பது தெரியவந்தது. உடனே அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். துறை ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: