மின் கட்டணங்களில் சலுகை அறிவித்தது கேரள மின்வாரியம்!: 70% மின் கட்டணத்தை செலுத்தினால் போதும்!!!

திருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க கேரள மின்வாரியம்  முடிவு செய்துள்ளது. அதன்படி 70 சதவீதம் மின் கட்டணத்தை செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து, கேரளாவிலும் இதேநிலை இருப்பதால் பயனீட்டாளர்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் அளிக்க அம்மாநில மின்வாரியம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன்படி, மானியத்தை கணக்கிட புதிய மென்பொருள் உருவாக்கப்படும் வரை பயனீட்டாளர்கள் 70 சதவீதம் கட்டணத்தை செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் 19 முதல் ஜூன் 19 தேதி வரையிலான காலகட்டத்திற்கே மின் கட்டண மானியம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டுவேலை செய்வோர் மற்றும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக மின் கட்டணத்தை 5 தவணைகளில் செலுத்தலாம் எனவும் கேரள மின்வாரியம் அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறது. கொரோனா தொற்று ஒருபுறம் இருக்க வருமானம் இன்றி தவித்து வரும் சூழலில் மின் கட்டணம் பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் 70 சதவீதம் மின்கட்டணத்தை செலுத்தினால் போதும் என கேரள மின்வாரியம் சலுகை அறிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: