சேலத்தில் ரேடியோ போன்ற பொருள் வெடித்து விவசாயி உயிரிழப்பு; கொலை முயற்சியில் ஈடுபட்ட சகோதரர் கைது!!!

சேலம்; சேலத்தில் பனமரத்துப்பட்டி அருகே மர்ம பொருள் வெடித்து விவசாயி இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் அண்ணனே தம்பியை வெடி வைத்து கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமம் வெள்ளிமலையார் தோட்டத்தை சேர்ந்தவர் மணி (என்கிற) மாரிமுத்து (வயது 59). விவசாயி. இவர் கடந்த 16ம் தேதி தனது தோட்டத்தின் அருகே கிடந்த ரேடியோ வடிவிலான மர்ம பொருள் ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

அதை பரிசோதித்து பார்ப்பதற்காக மின் இணைப்பு கொடுத்தபோது அந்த மர்ம பொருள் திடீரென வெடித்தது. இதில் மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும் மணியின் அருகே இருந்த அவரது பேத்தி சவுரதி மற்றும் அண்ணன் மகன் வசந்தகுமார், நண்பர் நடேசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இறந்துபோன மணியின் அண்ணன் செங்கோடன், தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் மர்ம பொருள் வெடித்து விவசாயி பலியான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

வழக்கின் பின்னணி,  

இறந்துபோன மணி என்கிற மாரிமுத்துவிற்கு செங்கோடன், கோவிந்தன், ஜெயபால் ஆகிய மூன்று சகோதரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அந்த பகுதியில் கூட்டாக தோட்டம் இருந்துள்ளது. இந்த தோட்டத்துக்கு நீண்ட நாட்களாக வழித்தடம் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் மணி, ஜெயபால் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து அந்த பகுதியில் வேறு ஒருவரிடம் இருந்து வழிப்பாதைக்கான நிலத்தை விலைக்கு வாங்க முடிவு செய்தனர். அப்போது செங்கோடன் தனக்கு வழிப்பாதை தேவை இல்லை. நீங்கள் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளுங்கள் எனக்கூறி உள்ளார்.

இதையடுத்து மணி, ஜெயபால் மற்றும் மாதேஸ்வரன் ஆகிய 3 பேர் கூட்டாக இணைந்து வழிப்பாதைக்கான நிலத்தை வாங்கிக் கொண்டனர். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு செங்கோடன் தனக்கும், அதில் வழித்தடம் வேண்டும், என கேட்டுள்ளார். அதற்கு ஜெயபால், மாதேஸ்வரன் ஆகியோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் இறந்துபோன மணி மட்டும் நாங்கள் அப்போது கேட்டபோது, நீ வேண்டாம் என்று கூறினாய், அதனால் உனக்கு இப்போது தடம் விட முடியாது எனக்கூறியுள்ளார். இதனால் அண்ணன், தம்பிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த செங்கோடன் புதிய எப்.எம். ரேடியோ ஒன்றில் மின் இணைப்பு கொடுத்தால் வெடிக்கும் வகையில் தானே தயார் செய்து ஒரு பையில் போட்டு, அதனுடன் 2 மது பாட்டில்களையும் இணைத்து, மணியின் தோட்டத்தின் அருகே வைத்துள்ளார். அதனை மணியும் யாராவது சாலையோரம் விட்டு சென்று இருப்பார்கள் என நினைத்து வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். பையில் புதிய எப்.எம். ரேடியோ இருப்பதை கண்டு அதனை சோதிப்பதற்காக மின் இணைப்பு கொடுத்துள்ளார். அப்போது அதில் இருந்த வெடி பொருட்கள் வெடித்து மணி உயிரிழந்தார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, துணை போலீஸ் சூப்பிரண்டு உமா சங்கர், இன்ஸ்பெக்டர்கள் அம்சவல்லி, ஆனந்தன், குலசேகரன் மற்றும் தனிப்படை போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் பாராட்டியுள்ளார். வழிப்பாதை பிரச்சனையில் சொந்த தம்பியை அண்ணனே வெடிவைத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: